தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை தெரிந்து கொள்ளுங்கள்:
தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆணையாளர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நிறையப் பேர் தேவையற்ற தகவல்களையும் இல்லாத தகவல்களையும் கேட்பதாக தெரிவிக்கின்றார்கள் .ஒரு நபர் தனது வீட்டில் பிடிபட்ட பாம்பு என்ன வகையைச் சேர்ந்தது என்று கேட்டுள்ளார்.ஒரு தாசில்தார் பல வால்யூம் தகவல்களை கேட்பதாக கூறுகின்றார்.
1. விண்ணப்பிக்கும் நபருக்கு தொடர்புடைய தகவல் தான் கேட்கப்படவேண்டும் என்ற அவசியமில்லை.
2. அரசு அலுவலகங்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், அரசின் மானிய உதவு பெறுகின்ற அமைப்புகள் இவை அனைத்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் தரக் கடமைப்பட்டவை.
3. உரிய கட்டணங்கள் செலுத்தினால் போதும். ஆவணங்களின் நகல்களைக் கொடுக்க வேண்டும்.
4. இந்த தகவல்கள் தான் கேட்க வேண்டும் என்று இல்லை.
5. வேறு துறைகளின் விண்ணப்பம் கொடுத்தாலும் உரிய துறைக்கு அனுப்ப வேண்டும்.
6. விண்ணப்பத்தில் எதற்காக தகவல்கள் கேட்கின்றோம் என்று தெரிவிக்க வேண்டியதில்லை.
பலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எப்படி விண்ணப்பம் செய்வது என்று கேட்கின்றார்கள். துணைப் பொது தகவல் அலுவலர்கள், பொதுத் தகவல் அலுவலர்கள் தகவல் கேட்கும் மக்களுக்கு விண்ணப்பம் எழுத உதவ வேண்டும். ஆனால் அதிகாரிகள் தகவல் அறியும் சட்டம் என்றாலே பீதியடைவார்கள் !
மாதிரி விண்ணப்பப் படிவம் ஒன்று கீழே கொடுத்திருக்கின்றேன்.
பதிவஞ்சல்
கோயமுத்தூர்
05.05.2014
அனுப்புநர்:
பெயர்,
அஞ்சல் முகவரி.
பெறுநர்:
பொதுத் தகவல் அலுவலர்,
வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்
( வருவாய் வட்டாட்சியர் உதாரணதிற்கு சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் பெயரை குறிப்பிடவும்)
அய்யா,
எனக்கு கீழே கண்ட தகவல்களை அளிக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன்.
1.சாதிச் சான்று கோரி 05.04.2014ல் விண்ணப்பம் செய்திருந்தேன். அந்த விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டதா?
2.05.04.2014 ல் எத்தனை விண்ணப்பங்கள் பெறப்பட்டன? அந்த விண்ணப்பங்கள் வரிசைப் படி பரிசீலிக்கப்பட்டதா?
இத்துடன் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி செலுத்த வேண்டிய ரூ10/- நீதிமன்ற கட்டண வில்லை வடிவில் செலுத்தப்படுகின்றது.
விண்ணப்பதாரர் கையொப்பம்
துணைப் பொதுத் தகவல் அலுவலர்கள் அல்லது பொதுத் தகவல் அலுவலர்கள் இருந்தால் அவர்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இந்த மாதிரி விண்ணப்பம் போதுமானது. தகவல்கள் அலுவலகத்தின் பணிகளுக்குட்பட்டதாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு உங்கள் தெருவில் விதிமுறைகளுக்கு மாறாக ஊராட்சி, பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் இணைப்பு தருவதாக நீங்கள் சந்தேகப்பட்டால்நீங்கள் இந்தமாதிரி கேட்கவேண்டும்.
1. கோயமுத்தூர் மாநகராட்சியின் 12ம் வார்டுக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தோர் பட்டியலைத் தரவும்.
2. 2014ம் ஆண்டு குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தோரில் எத்தனை பேருக்கு இணைப்பு தரப்பட்டுள்ளது. அவர்கள் விபரம் தரவும்.
3. குடிநீர் இணைப்பு காத்திருப்போர் பட்டியலில் வரிசை எண் படி தரப்பட்டுள்ளதா? இல்லையெனில் என்ன காரணத்திற்காக வரிசைப் படி இல்லாமல் கொடுக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்கவும்
.
தகவல் அறியும் சட்டத்தில் விண்ணப்பம்
1. எழுத்து மூலமாக இருக்க வேண்டும்.
2. விண்ணப்பத்தினை பதிவஞ்சல் மூலமாக அனுப்புங்கள். நகல், தபால் மூலம் அனுப்பிய இரசீது ஒப்புகை அட்டை பாதுகாப்பாக வைத்திருங்கள்.
அல்லது நேரில் கொடுத்தால் ஒப்புகை வாங்குங்கள்.
3. மாநில அரசு துறைகளுக்கு விண்ணப்பத்துடன் ரூ10/ - நீதிமன்ற ஒட்டுவில்லை ( COURT FEE STAMP -நீதிமன்ற வளாகங்கள் தாசில்தார் அலுவலகங்களுக்கு பக்கத்தில் பெட்டிக்கடைகளில். முத்திரைத் தாள் விற்பனையாளர்களிடம் கிடைக்கின்றது). மத்திய அரசுக்கு ரூ10/- க்கு கேட்பு வரைவோலையாக செலுத்தப்படவேண்டும். ஸ்டேட் பேங்க் கடன் அட்டைகள் மூலமாக இணையத்திலும் செலுத்தலாம்.
விண்ணப்பம் பெற்ற நாளிலிருந்து 30 நாட்களுக்குள் பொதுத் தகவல் அலுவலர் பதில் அளிக்கவிட்டால் அல்லது விண்ணப்பம் வேறு ஏதாவது காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டால் தமிழ்நாட்டினை பொருத்த வரை முதுநிலை பொதுத் தகவல் அலுவலரிடம் முதல் மேல்முறையீடும் தமிழ்நாடு தகவல் ஆணையத்திடம் இரண்டாவது மேல் முறையீடும் செய்யப்படவேண்டும். தனி மனித சுதந்திரம் மற்றும் உயிருக்கு ஆபத்து உள்ள சூழ்நிலைகளில் 48 மணி நேரத்தில் தகவல் தர வேண்டும். காவல் துறை ஒரு நப்ரினை கைது செய்தால் அந்த நபர் மேல் உள்ள வழக்கு பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி 48 மணி நேரத்திற்குள் தகவல் தர வேண்டும்.
காவல் துறையைப் பொருத்த வரை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அல்லது காவல்துறை ஆணையாளர்கள் பொதுத் தகவல் அலுவலர்களாக உள்ளனர்.
கோயமுத்தூர் மாவட்டத்தில் வருவாய் துறையைப் பொருத்த வரை மாவட்டஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), பொதுத் தகவல் அலுவலராகவும் மாவட்ட வருவாய் அலுவலர் முதல் மேல் முறையீட்டு நீதிமன்றமாகவும் தமிழ்நாடு தகவல் ஆணையம் இரண்டாவது மேல்முறையீட்டு நீதிமன்றமாகவும் இருக்கும்.
தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் நீங்கள்
1. ஆவணங்களை பார்வையிடலாம். முதல் ஒரு மணி நேரத்திற்கு கட்டணம் கிடையாது
2. ஆவணங்களை நகல் எடுக்கலாம். பக்கதிற்கு இரண்டு ரூபாய் அல்லது உண்மையாக ஆகின்ற செலவு
3. சான்றிட்ட நகல்கள் வழங்கப்படவேண்டும்.
4. மின்ணனு சேமிப்பு வடிவில் உள்ள ஆவணங்களை நீங்கள் அதே வடிவில் நகல் பெறலாம். அதாவது சி.டிப் பதிவுகள் போன்றவற்றின் நகல்களைப் பெறலாம்.
பொது மக்களுக்கு தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் எந்த துறையில் தகவல் கேட்க வேண்டும் என்ற குழப்பம் இருக்கின்றது. தமிழ்நாடு மாநில அரசு பலதுறைகளின் பொதுத் தகவல் அலுவலர்கள் மேல்முறியீட்டு அலுவலர்கள் பட்டியலை இணையத்தில் வெளியிட்டுள்ளது. மத்திய அரசு அனேகமாக குடிநீர்,சாக்கடை தெருவிளக்கு போன்றவை உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் வருகின்றது.
தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி அரசு துறைகள் தங்களது அலுவலர்களின் அதிகாரங்கள், கடமைகள் துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் அதாவது துறை பற்றிய அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் அறியும் படி தெரிவிக்க வேண்டும் . மக்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் கோப்புகள் அட்டவனைப்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்.
இந்தக் கடமையை செய்தாலே பாதி விண்ணப்பங்கள் குறைந்து விடும்.
http://www.tn.gov.in/rti/revenue/PIO-APPL-dist-cbe.pdf
தமிழ்நாடு அரசு இணையத்தில் தமிழில் வெளியிட்டுள்ள கையேடு:
http://www.tn.gov.in/rti/proactive/guidebook_rtiact.pdf
மத்திய அரசு இணைய தளத்தில் நீங்கள் தகவல் உரிமைச் சட்டப்படி விண்ணப்பிக்கலாம்
www.rtionline.gov.in
மத்திய அரசின் தகவல் உரிமைச் சட்டக் கையேடு ஆங்கில பி.டி.எப் கோப்பு வடிவில்
http://rti.gov.in/RTICorner/Guide_2013-issue.pdf
தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆங்கிலத்தில் பி.டி.எப் வடிவில்
http://rti.gov.in/rti-act.pdf
